இதோ வந்து விடும்,
அதோ வ்ந்து விடும் என்று
உன் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
நிமிடங்களின் வேதனையை எப்படி
உனக்கு விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை...
இருக்கும் இடத்தை விட்டு விலகாமல்,
உணவு உண்ணப் பிடிக்காமல்
என் கைபேசியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்...
என் கைபேசியின் அழைப்பு ஓசை எனக்குள்
ஒலித்து எதிரொலிக்கிறது ஓராயிரம் முறை...
இதோ என் கைபேசி ஒலிக்கிறது,
இதோ வந்துவிட்டது ஒரு அழைப்பு,
அது உன்னிடம் இருந்து தான் என்ற பெருமகிழ்ச்சியில் என்
கைபேசியை கையில் எடுக்கிறேன்...அது நீ இல்லை...என் நண்பர்களில்ஒருவன்...
என்றாவது ஒரு முறை அழைப்பவன் இந்த நேரம் அழைத்து தான்
என் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா..??
கடவுளே ஏன் இந்த மரண வலி...அலுத்துக் கொண்டே
மறுபடியும் படுக்கையில் சாய்கிறேன்...
உன் நினைவுகள் என்னை
முழுதாய் ஆட்கொண்டு விட
உனக்கான் என் காத்திருத்தல் தொடர்கிறது...
மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை...
என்னுடைய kilo-bytes அளவிலான memory-ல்
பதிந்துவிட்ட உன் அழைப்பு எண்ணை என் கைபேசியில்
காதலோடு அழுத்துகிறேன்..
உனக்கான அலைவரிசையில் என் அழைப்பு பயணிக்கும் போது
இதயம் படபடவென அடித்துக் கொள்கிறது..
உன் கைபேசி சிறிது நேரம் ஒலித்து விட்டு அமைதியாக
என் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் இதயம் இன்னும் பெரிய ஏமாற்றத்துடன்
மீண்டும் உன் நினைவுகளுக்கே திரும்புகிறது...
“உன் அழைப்பிற்காகக் காத்திருக்கிறேன்,
சீக்கிரம் கூப்பிடு” - உனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு
அடுத்த இரண்டு நிமிடங்கள் என் கைபேசியின் திரையை
கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
வேலை அசதியில் தூங்கிக்கொண்டிருப்பாய்,
விழித்தவுடன் நிச்சயம் அழைப்பாய்..எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்...
இன்னும் சில மணி நேரங்கள் உனக்கான
என் காத்திருத்தல் தொடர்கிறது...
தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து செல்ல முயல்கிறேன்,
திடீரென என் கைபேசி ஒலிக்க ஓடி வந்து அதைக் கையில் எடுக்கிறேன்
இந்த முறை கண்டிப்பாக நீயாகத் தான் இருக்க வேண்டும்,
எதிர்முனையில் உன் குரல் கேட்ட அந்த நொடி நான்
உனக்காய் காத்திருந்த பல மணி நேரங்களும் என்
வாழ்க்கையின் கணக்கிலிருந்து ஒரு நொடியில் மறைந்து விட்டன..
எனக்கான இந்த நாள் இப்போது தான் துவங்குகிறது,
உன் குரலைக் கேட்ட படி...