Friday, July 17, 2009
நிலை மாற்றும் காதல்..
மழையில் நனைந்து சிலிர்த்துக்
கொண்ட பறவையின் சிறகாய் படபடக்கிறது மனம்
நீ அருகில் வந்தவுடன்.
பேசி விடத் துடிக்கும்
மனதிற்கு எப்போதும் ஒத்துழைப்பதில்லை
என் உதடுகள்.
நீ தற்செயலாய் உதிர்த்துச்
செல்லும் ஒற்றைப் பார்வையில்
உடைந்து சிதறுகிறது என் மனம் ஒரு ஆயிரம்
துண்டுகளாய்.
எந்நிலையில் இருப்போரையும்
தன் நிலை மறக்கச் செய்யும் காதலில்
என் நிலை மாறாமல் இருக்க நான் ஒன்றும் விதிவிலக்கல்ல..
மெதுவாய் சில மௌனங்கள்
மனதை ஆட்கொண்டு விட,
உன் நினைவுகளில் நடந்து கரைக்கின்றேன்
உறக்கம் இல்லாத இந்த இரவை….
Tuesday, July 7, 2009
உனக்கான எனதொரு உலகம்
வியாபித்திருக்கிறது என் உலகம்..
உன் ஒற்றைப் பற்றுதலில்
மலர்ந்து விரியவும், சின்னதொரு
புறக்கணிப்பில் உடைந்து நொறுங்கவும்.
நேற்று நீ வீசிய ஒரு அலட்சியப் பார்வையில்
உடைந்து விழுந்த அதன் பாகங்களை
ஒன்றாய் சேர்த்துக் கட்டுகிறேன் எனக்கானதொரு
புதிய உலகத்தை, நீ இன்று மறுபடியும்
உடைப்பதற்கு..
எப்போதும் தோல்வியைத் தழுவுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்கும் என் முயற்சியில்,
நாள் முடிவில் மீண்டும் தன் இயல்பிழந்து
உன் உள்ளங்கைக்குள் போய் சுருங்கிக் கொள்கிறது
என் உலகம், அடுத்த விடியலுக்காக..
Monday, July 6, 2009
மழைக்காலம்
மழைக் காலத்தின் ஒரு
விடுமுறை நாளின் பிற்பகல் பொழுதில்
உன் வழக்கமான ஒரு ஊடலுடன் தொடர்கிறது
நம் அன்றைய காதல் கதை
அறை முழுவதும் பரவிக்
கிடக்கின்றன, மெதுவாய் உருகும்
மெழுகின் வெளிச்சமும்
நம் மௌனங்களும்...
நீ கோபமாய் இருப்பது தெரிந்து
வானம் அழுதது, மழையாய்.
உன் நிழலை சித்திரமாய்
சுவற்றில் வரைந்து கொண்டிருந்தது
மெழுகின் வெளிச்சம்.
அறையின் ஜன்னல் அருகே நின்றிருந்த
என் முகத்தில் மழைச்சாரல் தெறிக்க
மெதுவாய் கரைகின்றன என் மௌனங்கள்.
உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன், நீ
இன்னும் உன் புறம்
காட்டி அமர்ந்திருந்தாய்.
அப்போது வீசிய ஒரு பலத்த காற்றில்
ஜன்னல் கதவுகள் படபடக்க
அனிச்சையாய் நீ என்னைப் பார்க்கிறாய்….
உன் பார்வை முன் மண்டியிடுகின்றன
என் ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் ….
உன் கோபம் போல் தான் நம் காதலும்,
எப்போது விழிக்கும் என்று
தெரியாது. திடீரென எழுந்து அருகில் வருகிறாய்.
என் கைகளைப் பற்றிக் கொண்டு மிதமான
ஒரு வெப்பம் உடலெங்கும் பரவ
மிருதுவாய் நீ முத்தம் இட,
நம் உடலெங்கும் பரவுகிறது காதல்
இப்போது மழை இன்னும் அதிகமாய் பெய்யத் துவங்குகிறது.
நம் முத்தத்தின் வெப்பத்தில் மெழுகாய்
கரையத் துவங்குகிறது, இந்த இனிய மழைப் பொழுது...
Friday, July 3, 2009
காரணங்கள் எதுவுமில்லை
நின்று போன ஒரு இரவு தன்
பாடலை ஆள்அரவமற்ற
வீதியில் மெலிதாய்
ஒலித்துக் கொண்டிருந்தது
வெளியில் குளிர் தாங்காமல்
என் அறை நுழைந்து என்னை
வருடிச் சென்ற காற்று
நினைவுபடுத்துகிறது, உன் விரல்களின் அரவணைப்பை..
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது,
மௌனங்களை வேலியாக்கி உன்னைப்
பாதுகாத்துக் கொள்ள…
என் விழி பிறந்து முகம்
அளந்த கண்ணீர் விட்டுச் செல்கிறது,
புறக்கணிப்பின் தடயங்களை என் முகமெங்கும்
நீ இல்லாத என் நாட்கள்
வீட்டுச் சுவரில் தேன் தேடும் ப்ளாஸ்டிக்
பட்டாம்பூச்சி போல் போலியானவை
என்று உனக்கும் தெரிந்திருக்கக் கூடும்
வெயிலின் தன்மை சற்றே குறைந்து
சூரியன் மறையத் தொடங்கியிருந்த
ஒரு இலையுதிர்காலத்தில் இந்தக்
காதல் முறிந்து விட்டது என்று சொல்லிச் சென்றாய்
நாம் பிரிந்ததற்கான காரணங்களை
அலசி, ஆராய எனக்கு விருப்பமில்லை
நாம் மீண்டும் சேர்வதற்கான காரணம் வேறு
ஒன்றும் இல்லை
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைத் தவிர…
Thursday, July 2, 2009
தனிமையின் மீளாத் துயர்
வீட்டின் வண்ணங்கள்
உதிர்ந்த சுவர் போல
உலர்ந்து போகிறது வாழ்க்கை
நீயற்ற நேரங்களில்...
நீ இல்லாத இரவின் நிசப்தங்கள்
எவ்வளவு கொடுமை என்று உனக்குத்
தெரிய வாய்ப்பில்லை...
விளக்கை அணைத்தபடி என்
வீட்டு கடிகாரத்தின் வினாடி முள்ளின் சப்தத்தில்
எளிதாய் கடந்து செல்லும் காலத்தை எண்ணிக்
கொண்டிருக்கிறேன்.
கடைசியாய் உன்னுடன் உறவாடிய
என் வார்த்தைகள் எனக்குள்
தானே ஒலித்துச் செல்கின்றன ஓயாமல்...
இன்னும் நீளுமா தெரியவில்லை
இந்த இரவு, ஆனால் என் உயிர் வாட்டும்
உன் பிரிவின் துயர் மட்டும் குறைய வாய்ப்பில்லை...
என் தனிமையின் கொடுமையை உனக்கு
எடுத்துரைக்க சந்தர்ப்பங்கள் அநேகமாய்
அண்மைக் காலத்தில் எதுவும் இல்லை.
இனிமேல் என்னுடன் பேச எதுவும் இல்லையென்று
சொல்லி விட்டாய்.
உன்னைப் பார்த்ததும்
உன் காலடியில் விழுந்து நொறுங்கக்
காத்திருக்கின்றன என்னுடைய சில மௌனங்கள்...
மழை விட்டிருந்த ஒரு மாலைப் பொழுதில்,
எப்போதும் போலவே இப்போதும் உன்னை
நினைத்துக் கொண்டே என் வீட்டு மொட்டை மாடியில்
நடந்து கழிக்கும் ஒரு பொழுதில், எங்கோ,
எப்படியோ உதிர்ந்து காற்றில் திக்கற்றுத்
திரியும் பெயர் தெரியாத ஒரு பறவையின் சிறகு என்னிடம்
உரைத்துச் செல்கின்றது, தனிமையின் மீளாத் துயரை...
பிரிவின் வலி.!!
திட்டினாலும் தாங்கிக் கொள்ளும்
மனது, உன்னுடைய சின்ன மௌனத்தில்
உடைந்து நொறுங்கிப் போகிறது...
சில சமயாங்களில்
உன்னை இழந்து விட்டோம் என்று
தோன்றும் மனது மறுபடியும் தன்
இயல்புக்குத் திரும்பி உனக்காகக்
காத்திருக்கச் சொல்கிறது...
என் 24 மணி நேரத்துடன்
உன்னுடன் நான் இருந்த நிமிடங்களும்
சேர்ந்து கொண்டு என் நாட்களின் நீளத்தை
அதிகரித்து இன்னும் என்னை அதிகமாய் வாட்டுகின்றன...
மழை நின்ற பிறகு எந்தப் பற்றுதலும்
இல்லாமல் இலையின் நுனியில் தொங்கிக்
கொண்டிருக்கும் கடைசி மழைத்துளி போல
மனம் அவளின் நினைவுகளைக் கெட்டியாய்ப்
பிடித்த படி ஏதோவொரு நம்பிக்கையில்
வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது...
என்னைப் போலவே நீயும்
நினைவுகளை அசை போடுவாய் என்ற ஒரு
சின்ன பேராசை அதற்கு...
நாள் முடிவில் உன்னிடம் இருந்து
எந்த செய்தியும் இல்லாமல் அந்த நாள்
மிகச்சாதாரணமாய் இறந்து போகிறது...
மறுநாள்...
தன்னைப் புதிதாய் பிரசவித்துக் கொண்டு என்னைத் துயரின்
இச்சைக்கு ஆளாக்கி விடுவதை வழக்கமாய்க் கொண்டுவிட்டது...
நானும் அதனுடனே வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்...
இந்நாட்களில் தூக்கம் மட்டுமே
என் வலிக்கு தற்காலிக மருந்தாய் இருக்கிறது, ஆனால் அதுவும்
கிடைப்பது அரிதாய்ப் போனது...[like AB negative blood group ;)]