Thursday, December 24, 2009
தோல்வியுற்ற கணம்.!!
சட்டென சுட்டு விடுகிறது, தோல்வி
அறிவிக்கப்படும் கணம் கோபத்தில் வந்து விழும்
ஒரு வார்த்தை...
அக்கணம் முதல் அறிந்ததில்லை
அவ்வளவு வீரியம் அந்த வார்த்தைக்கு உண்டென்று..!!
மிகக் குறைந்த நேரத்தில் சொல்லப்படும்
ஒரு சொல்லானது ஒரு மீட்க முடியாத
தொலைவில் உறவுகளைத் தொலைத்து விடுகிறது...
அந்த ஒரு கணம் உணர்த்துகிறது
மனம் சொற்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை..!!
என் தோல்விகள் அறிவிக்கப்பட்ட
நிமிடங்களைப் பத்திரமாய் சேகரிக்க விரும்புகிறேன்
என்றாவது ஒரு நாள் அவற்றை என் விருப்பம் போல்
வாழ்ந்து விட...
Monday, December 21, 2009
லெக் புல்லிங்..!! - 1
மல்லாக்க படுத்து விட்டத்த தான் பார்க்கனும்...இது நம்ம அன்றாட வாழ்க்கையில நடக்குறது தான்....சின்ன சின்ன பிட் பீஸ் தான் லெக் புல்லிங்... ஃபர்ஸ்ட் டாபிக்-னு தான் கொஞ்ஜம் பெரிய இண்ட்ரோ...பொறுத்துக்கோங்க...!!
முதல் புல்லிங் எங்க டீம் லீடர் ப்ரேம்-ல இருந்து ஆரம்பிப்போம்..!!
அவரு தான் அப்போ இல்ல இப்போ கூட இருக்குற ஒரே டைம் பாஸ். ;-)
எப்டியும் இதப் படிச்சுட்டு அவரு என்ன திரும்ப லெக் புல்லிங் பண்ணுவாரு, அரசியல்ல இதெல்லாம் சகஜம்-னு போறது தான நம்மோட பெருந்தன்மை..!!
அப்போ சென்னை டைடல் பார்க்-ல தான் ஆ(ப்)பீஸ்... விமல் புதுசா எங்க டீம்ல
சேர்ந்திருந்தான்..அவனும் டீம் லீடர் ப்ரேம் வீட்டு பக்கத்துலன்றதால, ஒன்னா தான் பைக்ல போவாங்க...பையன் வேலைக்கு சேர்ந்த புதுசுன்றதால ஆர்வக் கோளாரு, நிறைய கேள்வி கேட்டிருக்கான்...
மறுநாள் ஆ(ப்)பீஸ்ல...
ப்ரேம்: “இவன் எப்போ பார்த்தாலும் என் கிட்ட முட்டாள் தனமாவே கேள்வி கேட்குறான்டா.”
நான்: “உங்க கிட்ட அப்டி தான ப்ரேம் கேள்வி கேட்க முடியும்.”
கேட்ட மறுநொடி எங்க சீனியர் எஞ்ஜினியர் பாலா கொலைவெறியோட சிரிக்க, அடுத்த அரை மணி நேரம் ப்ரேம் கண்ணுல படாம எஸ்கேப்ப்ப்ப்ப்...தான்... :-)
புறக்கணிப்பு.!!
Sunday, December 20, 2009
இன்றைய இரவும்..!!

விளக்கணைத்து
போர்வைக்குள் என்னைப் புதைத்துக்
கொள்ளும்
இந்த இரவில் வந்து போகின்றன
சின்னச் சின்னதாய் சில ஞாபகங்கள்...
காலையிலிருந்தே நினைவில் கொண்டு
பின் தொலைபேசியில் அழைக்க முடியாமல் போன என் அம்மா
நெடுநாட்களுக்கு முன்னரே வாங்கி வைத்து, பின்
ஊருக்குப் போகும் நாளுக்காகக் காத்திருக்கும் என் அப்பாவிற்கான ஸ்வெட்டர்
நீண்ட காலம் தொடர்பில் இல்லாமல்
மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட தோழனுடனான கல்லூரி நாட்கள்
முறிவுற்ற காதலின் பிரிவுற்ற பொழுது
நிதானம் இல்லாமல் பிழை செய்த கணங்கள்
மறுநாள் முடிக்க வேண்டிய அலுவலகப் பணிகள்
இத்தினம் கட்ட முடியாமல் போன தொலைப்பேசிக் கட்டணம்
நிறுத்துகையில் கவனித்த என் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் அளவு
இன்னும் சில....என் மூளையில் பதிவிட...
வழக்கம் போலவே...
விடாது ஒலி எழுப்பியவாறு சுழலும்
மின் விசிறியின் சத்தத்தில் உறங்கித் தொலைக்கின்றேன்,
இயந்திரம் ஆகிவிட்ட வாழ்வின் இன்றைய இரவையும்...
Friday, December 18, 2009
ஜஸ்ட் ஃபார் ஜோக்..!!
கவுண்டமணி வெளியில் கிளம்பும் நேரம் பார்த்து செந்தில் எதிரே வருகிறார்
.
கவுண்டமணி: ஆஹா, சாதரணமா இவனப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. வெள்ளிக்கிழமை அதுவுமா இவனப் பார்த்துட்டோமே..!! என்ன ஆகப் போகுதோ...
செந்தில்: என்னண்ணே எங்கண்ணே கெளம்பிட்டீங்க...
கவுண்டமணி:டேய், உன்னப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. இதுல எங்க போறேன்னு வேற கேட்டுட்டியா, இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரி தான்.
செந்தில்: அண்ணே சொல்லுங்கண்ணே...
கவுண்டமணி:ஆஆங்...கம்ப்யூட்டர் கத்துக்க...
செந்தில்: போங்கண்ணே வெளயாடதீங்கண்ணே...
கவுண்டமணி:ஆமா இவரு சுனில் கவாஸ்கரு, இவருகிட்ட நாங்க பந்து போட்டு வெளயாடப் போறோம்...நீயே ஒரு அரை டவுசரு...நான் உன்கிட்ட வெளயாடப்போறேனா...
செந்தில்: போங்கண்ணே நீங்க எப்பவுமே இப்டித்தான் வய்யிவீங்க..(செந்தில் சோகமாக ஒரு expression கொடுக்கிறார்.)
கவுண்டமணி: ஆமா...என்னடா அது தலையில, காக்கா ஆய் போடுச்சா..??
செந்தில்: அண்ணே இது ஹேர் கலரிங்ணே.
.
கவுண்டமணி:ஏண்டா டேய், அந்தா அந்த மொனையில இருக்குற சைக்கிள் கடையில இருந்து செயின் ஆயில் எடுத்து தலையில தேய்ச்சிட்டு வந்து ஹேர் கலரிங்னு பொய்யா சொல்ற...
செந்தில்: போங்கண்ணே நீங்க, எப்பவுமே இப்டித்தான் நான் ஹேர் கலரிங் பண்ணாலும் புடிக்காது, சந்தேகம் கேட்டாலும் புடிக்காது..
கவுண்டமணி: (கனத்த குரலில்) என்னடா உன் சந்தேகம்??
செந்தில்:ஏரோப்ளேன் எப்டிணே பறக்குது..
கவுண்டமணி: ஹஹ்ஹஹ்ஹ.... ஹஹ்ஹஹ்ஹ.......அதுவாடா மண்டையா ... அதுல 6 பெரிய டயர் இருக்குடா, அதுல ஸ்பீடா போய் அப்டியே பறந்து போய்டுது...
செந்தில்: அண்ணே பொய் சொல்லாதீங்கண்ணே...பஸ்-ல கூட தான் 6 டயர் இருக்கு...அது மட்டும் ஏண்ணே பறக்க மாட்டேங்குது...
கவுண்டமணி:(கடுப்பாக) உன்ன மாதிரி பன்னியல்லாம் ஏத்துனா எப்டிடா பறக்கும்....
செந்தில்: போங்கண்ணே என்றபடி சோகமாக தலையை குனிகிறார்....
கவுண்டமணி: டேய்...அதென்னடா கையில, நிரோத் டப்பாவா..
செந்தில்: புருட்டிணே....
கவுண்டமணி: என்னா டீ..???
செந்தில்: புருட்டீ...
கவுண்டமணி: இது எங்கடா வாங்குன..??
செந்தில்: இதுவாண்ணே...வரும் போது நம்ம அண்ணாச்சி கடைப் பக்கமா வந்தேனா, அவரு கடையில திரும்பி அரிசி எடுத்துகிட்டு இருந்தாரு, அப்டியே வெளில இருந்த புருட்டி டப்பாவ அவருக்கு தெரியாம எடுத்துட்டு வந்துட்டேண்ணே....(சொல்லிவிட்டு சிரிக்கிறார்)
கவுண்டமணி: அதான பார்த்தேன்...நீ காசு கொடுத்து வாங்குனா உலகம் அழிஞ்சுறாது....அத ஏண்டா கையில வச்சி நோண்டிக்கிட்டு இருக்க..?!?!
செந்தில்: அதுவாண்ணே, இத குடிச்சு முடிச்சிட்டு, வாயில வச்சி ஒரு ஊது ஊதி இப்டி டப்-புனு அடிச்சோம்னா...(சொல்லிக் கொண்டே செந்தில் கவுண்டமணி முகத்துக்கு நேராக frooti டப்பவை உடைத்து விடுகிறார். கவுண்டமணி முகமெல்லாம் frooti தெறிக்கிறது,)
கவுண்டமணி கடுப்பாக செந்திலைப் பார்க்கிறார்....
செந்தில்: இப்பதாண்ணே நீங்க கலர்ரா இருக்கீங்க..
கவுண்டமணி: ஏண்டா டப்பாவ மூஞ்சிக்கு நேரா உடச்சதும் இல்லாம, கலர்ரா இருக்கேன்னு நக்கலா பண்ற, ஒன்னய...என்றபடி கவுண்டமணி ஒரு கட்டையைத் தூக்கிக் கொண்டு செந்திலைத் துரத்துகிறார்.
செந்தில் அவரிடமிருந்து தப்பி தூரத்தில் நின்றபடி கவுண்டமணியைப் பார்த்து சிரிக்கிறார்.
கவுண்டமணி: படவா வா நீய்யி, உன்ன இந்தப் பக்கம் இனிமே பார்த்தேன் உன் மண்டைய கருக்கிபுடுறேன் கருக்கி.... என்றபடி கடுப்புடன் வீட்டிற்கு திரும்புகிறார்
Friday, July 17, 2009
நிலை மாற்றும் காதல்..
மழையில் நனைந்து சிலிர்த்துக்
கொண்ட பறவையின் சிறகாய் படபடக்கிறது மனம்
நீ அருகில் வந்தவுடன்.
பேசி விடத் துடிக்கும்
மனதிற்கு எப்போதும் ஒத்துழைப்பதில்லை
என் உதடுகள்.
நீ தற்செயலாய் உதிர்த்துச்
செல்லும் ஒற்றைப் பார்வையில்
உடைந்து சிதறுகிறது என் மனம் ஒரு ஆயிரம்
துண்டுகளாய்.
எந்நிலையில் இருப்போரையும்
தன் நிலை மறக்கச் செய்யும் காதலில்
என் நிலை மாறாமல் இருக்க நான் ஒன்றும் விதிவிலக்கல்ல..
மெதுவாய் சில மௌனங்கள்
மனதை ஆட்கொண்டு விட,
உன் நினைவுகளில் நடந்து கரைக்கின்றேன்
உறக்கம் இல்லாத இந்த இரவை….
Tuesday, July 7, 2009
உனக்கான எனதொரு உலகம்
வியாபித்திருக்கிறது என் உலகம்..
உன் ஒற்றைப் பற்றுதலில்
மலர்ந்து விரியவும், சின்னதொரு
புறக்கணிப்பில் உடைந்து நொறுங்கவும்.
நேற்று நீ வீசிய ஒரு அலட்சியப் பார்வையில்
உடைந்து விழுந்த அதன் பாகங்களை
ஒன்றாய் சேர்த்துக் கட்டுகிறேன் எனக்கானதொரு
புதிய உலகத்தை, நீ இன்று மறுபடியும்
உடைப்பதற்கு..
எப்போதும் தோல்வியைத் தழுவுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்கும் என் முயற்சியில்,
நாள் முடிவில் மீண்டும் தன் இயல்பிழந்து
உன் உள்ளங்கைக்குள் போய் சுருங்கிக் கொள்கிறது
என் உலகம், அடுத்த விடியலுக்காக..
Monday, July 6, 2009
மழைக்காலம்
மழைக் காலத்தின் ஒரு
விடுமுறை நாளின் பிற்பகல் பொழுதில்
உன் வழக்கமான ஒரு ஊடலுடன் தொடர்கிறது
நம் அன்றைய காதல் கதை
அறை முழுவதும் பரவிக்
கிடக்கின்றன, மெதுவாய் உருகும்
மெழுகின் வெளிச்சமும்
நம் மௌனங்களும்...
நீ கோபமாய் இருப்பது தெரிந்து
வானம் அழுதது, மழையாய்.
உன் நிழலை சித்திரமாய்
சுவற்றில் வரைந்து கொண்டிருந்தது
மெழுகின் வெளிச்சம்.
அறையின் ஜன்னல் அருகே நின்றிருந்த
என் முகத்தில் மழைச்சாரல் தெறிக்க
மெதுவாய் கரைகின்றன என் மௌனங்கள்.
உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன், நீ
இன்னும் உன் புறம்
காட்டி அமர்ந்திருந்தாய்.
அப்போது வீசிய ஒரு பலத்த காற்றில்
ஜன்னல் கதவுகள் படபடக்க
அனிச்சையாய் நீ என்னைப் பார்க்கிறாய்….
உன் பார்வை முன் மண்டியிடுகின்றன
என் ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் ….
உன் கோபம் போல் தான் நம் காதலும்,
எப்போது விழிக்கும் என்று
தெரியாது. திடீரென எழுந்து அருகில் வருகிறாய்.
என் கைகளைப் பற்றிக் கொண்டு மிதமான
ஒரு வெப்பம் உடலெங்கும் பரவ
மிருதுவாய் நீ முத்தம் இட,
நம் உடலெங்கும் பரவுகிறது காதல்
இப்போது மழை இன்னும் அதிகமாய் பெய்யத் துவங்குகிறது.
நம் முத்தத்தின் வெப்பத்தில் மெழுகாய்
கரையத் துவங்குகிறது, இந்த இனிய மழைப் பொழுது...
Friday, July 3, 2009
காரணங்கள் எதுவுமில்லை
நின்று போன ஒரு இரவு தன்
பாடலை ஆள்அரவமற்ற
வீதியில் மெலிதாய்
ஒலித்துக் கொண்டிருந்தது
வெளியில் குளிர் தாங்காமல்
என் அறை நுழைந்து என்னை
வருடிச் சென்ற காற்று
நினைவுபடுத்துகிறது, உன் விரல்களின் அரவணைப்பை..
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது,
மௌனங்களை வேலியாக்கி உன்னைப்
பாதுகாத்துக் கொள்ள…
என் விழி பிறந்து முகம்
அளந்த கண்ணீர் விட்டுச் செல்கிறது,
புறக்கணிப்பின் தடயங்களை என் முகமெங்கும்
நீ இல்லாத என் நாட்கள்
வீட்டுச் சுவரில் தேன் தேடும் ப்ளாஸ்டிக்
பட்டாம்பூச்சி போல் போலியானவை
என்று உனக்கும் தெரிந்திருக்கக் கூடும்
வெயிலின் தன்மை சற்றே குறைந்து
சூரியன் மறையத் தொடங்கியிருந்த
ஒரு இலையுதிர்காலத்தில் இந்தக்
காதல் முறிந்து விட்டது என்று சொல்லிச் சென்றாய்
நாம் பிரிந்ததற்கான காரணங்களை
அலசி, ஆராய எனக்கு விருப்பமில்லை
நாம் மீண்டும் சேர்வதற்கான காரணம் வேறு
ஒன்றும் இல்லை
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைத் தவிர…
Thursday, July 2, 2009
தனிமையின் மீளாத் துயர்
வீட்டின் வண்ணங்கள்
உதிர்ந்த சுவர் போல
உலர்ந்து போகிறது வாழ்க்கை
நீயற்ற நேரங்களில்...
நீ இல்லாத இரவின் நிசப்தங்கள்
எவ்வளவு கொடுமை என்று உனக்குத்
தெரிய வாய்ப்பில்லை...
விளக்கை அணைத்தபடி என்
வீட்டு கடிகாரத்தின் வினாடி முள்ளின் சப்தத்தில்
எளிதாய் கடந்து செல்லும் காலத்தை எண்ணிக்
கொண்டிருக்கிறேன்.
கடைசியாய் உன்னுடன் உறவாடிய
என் வார்த்தைகள் எனக்குள்
தானே ஒலித்துச் செல்கின்றன ஓயாமல்...
இன்னும் நீளுமா தெரியவில்லை
இந்த இரவு, ஆனால் என் உயிர் வாட்டும்
உன் பிரிவின் துயர் மட்டும் குறைய வாய்ப்பில்லை...
என் தனிமையின் கொடுமையை உனக்கு
எடுத்துரைக்க சந்தர்ப்பங்கள் அநேகமாய்
அண்மைக் காலத்தில் எதுவும் இல்லை.
இனிமேல் என்னுடன் பேச எதுவும் இல்லையென்று
சொல்லி விட்டாய்.
உன்னைப் பார்த்ததும்
உன் காலடியில் விழுந்து நொறுங்கக்
காத்திருக்கின்றன என்னுடைய சில மௌனங்கள்...
மழை விட்டிருந்த ஒரு மாலைப் பொழுதில்,
எப்போதும் போலவே இப்போதும் உன்னை
நினைத்துக் கொண்டே என் வீட்டு மொட்டை மாடியில்
நடந்து கழிக்கும் ஒரு பொழுதில், எங்கோ,
எப்படியோ உதிர்ந்து காற்றில் திக்கற்றுத்
திரியும் பெயர் தெரியாத ஒரு பறவையின் சிறகு என்னிடம்
உரைத்துச் செல்கின்றது, தனிமையின் மீளாத் துயரை...
பிரிவின் வலி.!!
திட்டினாலும் தாங்கிக் கொள்ளும்
மனது, உன்னுடைய சின்ன மௌனத்தில்
உடைந்து நொறுங்கிப் போகிறது...
சில சமயாங்களில்
உன்னை இழந்து விட்டோம் என்று
தோன்றும் மனது மறுபடியும் தன்
இயல்புக்குத் திரும்பி உனக்காகக்
காத்திருக்கச் சொல்கிறது...
என் 24 மணி நேரத்துடன்
உன்னுடன் நான் இருந்த நிமிடங்களும்
சேர்ந்து கொண்டு என் நாட்களின் நீளத்தை
அதிகரித்து இன்னும் என்னை அதிகமாய் வாட்டுகின்றன...
மழை நின்ற பிறகு எந்தப் பற்றுதலும்
இல்லாமல் இலையின் நுனியில் தொங்கிக்
கொண்டிருக்கும் கடைசி மழைத்துளி போல
மனம் அவளின் நினைவுகளைக் கெட்டியாய்ப்
பிடித்த படி ஏதோவொரு நம்பிக்கையில்
வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது...
என்னைப் போலவே நீயும்
நினைவுகளை அசை போடுவாய் என்ற ஒரு
சின்ன பேராசை அதற்கு...
நாள் முடிவில் உன்னிடம் இருந்து
எந்த செய்தியும் இல்லாமல் அந்த நாள்
மிகச்சாதாரணமாய் இறந்து போகிறது...
மறுநாள்...
தன்னைப் புதிதாய் பிரசவித்துக் கொண்டு என்னைத் துயரின்
இச்சைக்கு ஆளாக்கி விடுவதை வழக்கமாய்க் கொண்டுவிட்டது...
நானும் அதனுடனே வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்...
இந்நாட்களில் தூக்கம் மட்டுமே
என் வலிக்கு தற்காலிக மருந்தாய் இருக்கிறது, ஆனால் அதுவும்
கிடைப்பது அரிதாய்ப் போனது...[like AB negative blood group ;)]
Thursday, May 14, 2009
Friday, April 17, 2009
இதோ வந்து விடும் உன் அழைப்பு..!!
அதோ வ்ந்து விடும் என்று
உன் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
நிமிடங்களின் வேதனையை எப்படி
உனக்கு விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை...
இருக்கும் இடத்தை விட்டு விலகாமல்,
உணவு உண்ணப் பிடிக்காமல்
என் கைபேசியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்...
என் கைபேசியின் அழைப்பு ஓசை எனக்குள்
ஒலித்து எதிரொலிக்கிறது ஓராயிரம் முறை...
இதோ என் கைபேசி ஒலிக்கிறது,
இதோ வந்துவிட்டது ஒரு அழைப்பு,
அது உன்னிடம் இருந்து தான் என்ற பெருமகிழ்ச்சியில் என்
கைபேசியை கையில் எடுக்கிறேன்...அது நீ இல்லை...என் நண்பர்களில்ஒருவன்...
என்றாவது ஒரு முறை அழைப்பவன் இந்த நேரம் அழைத்து தான்
என் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா..??
கடவுளே ஏன் இந்த மரண வலி...அலுத்துக் கொண்டே
மறுபடியும் படுக்கையில் சாய்கிறேன்...
உன் நினைவுகள் என்னை
முழுதாய் ஆட்கொண்டு விட
உனக்கான் என் காத்திருத்தல் தொடர்கிறது...
மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை...
என்னுடைய kilo-bytes அளவிலான memory-ல்
பதிந்துவிட்ட உன் அழைப்பு எண்ணை என் கைபேசியில்
காதலோடு அழுத்துகிறேன்..
உனக்கான அலைவரிசையில் என் அழைப்பு பயணிக்கும் போது
இதயம் படபடவென அடித்துக் கொள்கிறது..
உன் கைபேசி சிறிது நேரம் ஒலித்து விட்டு அமைதியாக
என் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் இதயம் இன்னும் பெரிய ஏமாற்றத்துடன்
மீண்டும் உன் நினைவுகளுக்கே திரும்புகிறது...
“உன் அழைப்பிற்காகக் காத்திருக்கிறேன்,
சீக்கிரம் கூப்பிடு” - உனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு
அடுத்த இரண்டு நிமிடங்கள் என் கைபேசியின் திரையை
கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
வேலை அசதியில் தூங்கிக்கொண்டிருப்பாய்,
விழித்தவுடன் நிச்சயம் அழைப்பாய்..எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்...
இன்னும் சில மணி நேரங்கள் உனக்கான
என் காத்திருத்தல் தொடர்கிறது...
தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து செல்ல முயல்கிறேன்,
திடீரென என் கைபேசி ஒலிக்க ஓடி வந்து அதைக் கையில் எடுக்கிறேன்
இந்த முறை கண்டிப்பாக நீயாகத் தான் இருக்க வேண்டும்,
எதிர்முனையில் உன் குரல் கேட்ட அந்த நொடி நான்
உனக்காய் காத்திருந்த பல மணி நேரங்களும் என்
வாழ்க்கையின் கணக்கிலிருந்து ஒரு நொடியில் மறைந்து விட்டன..
எனக்கான இந்த நாள் இப்போது தான் துவங்குகிறது,
உன் குரலைக் கேட்ட படி...
Thursday, March 12, 2009
பிரிவின் வலி..!
”முடிந்தால் அடுத்த பிறவியில் சேருவோம்” என்று..
என் உயிர் இப்போதே தவம் இருக்கத் தொடங்கி விட்டது,
என் மரணத்தை எதிர்பார்த்து..!!
நான் கண் மூடிய மறு நொடி
என் போர்வைக்குள் நீ வந்து விடுகிறாய்,
என் தூக்கமும், கனவுகளும்
வெளியேறி விடுகின்றன..!
நீ பிரிந்து செல்லும் வேளையில்
உன் துப்பட்டா நுணி பிடித்து
தொங்கிக் கொண்டு வரும் என் உயிரை
தெரு முனையில் உதறி விட்டுப் போய் விடு..
பாவம் அதற்கு உன்னையும், என்னையும் தவிர
வேறு எவரும் தெரியாது...!!
நம் இதயங்கள் உரசிக் கொண்ட
பின்னொரு நாளில் நம் உதடுகள்
உரசிக் கொண்டோம்..
நீ பிரிந்து சென்ற பின் உதடுகள்
உரசிக் கொள்ளாவிட்டாலும் நம் இதயங்கள்
உரசிக் கொள்வதை இன்னும் உணர்கிறேன்...
நாம் பரிமாறிக் கொண்ட
முத்தத்தின் ஈரம் காயும் முன்னே
என் கண்களை ஈரமாக்கிச்
சென்று விட்டாய்...உன் பிரிவால்...
உனக்கு என்னவெல்லாம் பிடிக்காது
என்பதை சொல்லிக் கொண்டே வந்தாய்,
திடீரென்று ‘நீயும் தான்’ என்று சொல்லி விட்டு
மறைந்து விட்டாய்... இப்போது உனக்கு
பிடிக்காத என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...
Monday, January 5, 2009
Sunday, January 4, 2009
Saturday, January 3, 2009
வழக்கத்தை விட தாமதாமாய் எழுந்தேன்
வாசலில் கிடந்த செய்தித்தாளை எடுக்க மனமில்லை
காலை உணவு உண்ண விருப்பமில்லை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடிக்கவில்லை
கதவுகளை மூடிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன்
மனம் கனமாய் இருந்தது
நினைவெல்லாம் நீ தான் நிறைந்திருந்தாய்
நீ இல்லாத வாழ்வு எவ்வளவு கொடுமை என்று சலித்துக் கொண்டேன்
அன்று இரவு சீக்கிரமே தூங்கி விட்டேன்
மறுநாள் விழிக்கையில் வீட்டில் உன் நடமாட்டம் கண்டு
என் அன்றாட வாழ்க்கை மறுபடியும் கிடைத்து விட்டதில் புன்னகைத்துக் கொண்டேன்
நீ வந்து விட்ட மகிழ்ச்சியில் சிறிது நேரம் நிம்மதியாய் உறங்கத் துவங்கினேன்.


