Friday, August 29, 2008

உன் கால் பட்ட தேங்கிய
மழை நீரில் வானவில் வண்ணம்
தெரிகிறதெனப் பேசிக் கொள்கிறார்கள்,
நம் வீதி கடப்பவர்கள்...!!!
-------------------------------------------------------------

நீ காயப்போட்ட தாவணியில்
முந்தைய நாள் மழையில் ஒட்டிக்கொண்ட
மழைத் துளிகள், வெயில் ஏற, ஏற
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உன்
தாவணி நுனியில் தொங்கிக் கொண்டிருக்கின்றன...

Tuesday, August 26, 2008

உன் தாவணி காயப்போட்ட

கொடியில் பூக்களின் வாசம்..!!

தேன் தேடுகின்றன பட்டாம்பூச்சிகள்..!!

Monday, August 25, 2008

Low voltage-ல் துடிக்கும்

tube light போல் ,

என் இதயம் பட படக்கின்றது

அவளைப் பார்த்தவுடன்..!

Thursday, August 21, 2008

என் வீட்டு கடிகாரம்...



மாற்றம் நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும் சந்திக்கும் ஒன்று. உலகில் மாறாத ஒன்று இருக்கிறது என்றால் அது நேரம் தான். உங்களுக்கும் சரி, எனக்கும் சரி ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள் தான்.காலம் அதன் பாதையில் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நாம் தான் அதை சரியாக கண்டு கொள்வதில்லை...


நாம் எந்த வயதில் சரியாக மணி பார்க்க கற்றுக் கொண்டோம் என்று யாருக்காவது நினைவிருக்குமா??, எனக்கும் நான் எந்த வயதில் சரியாக நேரத்தைப் புரிந்து கொண்டேன் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கும், நேரத்திற்க்கும் இடையேயான சின்ன சின்ன நினைவுகளை இன்னும் மறக்கவில்லை.

எங்கள் கிராமத்து வீட்டில் இருந்த கடிகாரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.நீல நிறத்தில் சற்று பெரிதாய், நீளமாய் இருக்கும் அந்த கடிகாரம். அது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு மேல் பகுதியில் நேரத்தைக் கணக்கிட எண்களும், மணி காட்டும் முட்களும், கீழ் பகுதியில் கரண்டி வடிவில் ஒரு பெண்டுலமும் இருக்கும். வாரம் ஒரு முறை கடிகாரத்திற்கு சாவி கொடுத்து அந்த பெண்டுலத்தை ஆட்டி விட வேண்டும். என் அப்பா அந்த கடிகாரத்திற்கு சில நாட்களுக்கு ஒரு முறை சாவி கொடுப்பார். அவர் நாற்காலி மேல் ஏறி அதற்கு சாவி கொடுத்து இறங்கும் போது, அவர் ஏதோ ஒரு சாதனை செய்து விட்டு வருவது போல் அவரை வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன். எங்கள் வீட்டு கடிகாரம் மணிக்கொரு முறை ஒலி எழுப்பும். எட்டு மணி என்றால் எட்டு ஒலிகளும், பத்து மணி என்றால் பத்து ஒலிகளும் எழுப்பும் வகையான கடிகாரம் அது. அதன் ஒலியை கேட்பதில் அலாதி பிரியம் எனக்கு.


அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் புதிதாய் ஒரு டிவி வாங்கியிருந்தோம். அதில் வெள்ளி தோறும் ஒளியும்,ஒலியும் நிகழ்ச்சியைப் பார்க்க நிமிடங்களைக் கடத்துவது மிகவும் கடினமாய் இருக்கும். அப்போது எனக்கு சரியாக மணி பார்க்க தெரியாது. சமைத்துக் கொண்டிருக்கும் என் அம்மாவை அவ்வப்போது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பேன். அம்மாவும் இன்னும் இவ்வளவு நிமிடம் இருக்கிறது என்பார். நான் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பிப்பேன். திடீரென்று இடையில் நிறுத்தி விட்டு "அம்மா,மணி ஆகி விட்டதா.?" என்பேன். அம்மா "இல்லை" என்பார்கள். மீண்டும் சலிப்புடன் எண்ண ஆரம்பிப்பேன். இப்படியே எனக்கும், நேரத்திற்குமான உறவு மெல்ல ஆரம்பித்தது.


அடுத்த வந்த நாட்களில் கடிகாரத்தின் சின்ன முள்,பெரிய முள்ளின் நிலையை வைத்து எப்படி மணி பார்ப்பது என்று கற்றுக் கொண்டேன்.சில வாரங்களுக்கு அடிக்கடிகடிகாரத்தை பார்த்து நான் சொல்லும் நேரம் சரியா என்று அடிக்கடி என் அம்மாவிடம் கேட்டுக் கொள்வேன். அடுத்த சில வருடங்களில் மணி பார்ப்பது ஒரு பழக்கமாய் மாறி விட்டது. நான் வளர்ந்தவுடன் நானே பல முறை எங்கள் வீட்டு கடிகாரத்திற்கு சாவி கொடுத்திருக்கிறேன். எவ்வளவோ நாட்கள் நள்ளிரவில் உறக்கம் கலைந்து எழும் போது அந்த கடிகாரத்தின் வினாடி முள் சப்தம் மட்டும் துணையாக இருந்திருக்கிறது. பின் ஒரு சில வருடங்களில் அந்த கடிகாரம் பழுதடைந்து விட்டது. வேறு சில கடிகாரங்கள் அந்த இடத்தில் வந்து போய் விட்டன. ஆனாலும் அந்த பழைய கடிகாரத்தின் வினாடி முள் சப்தத்தையும், அதன் ஒலியையும் அவைகளால் தர முடிவதில்லை.வெறும் நேரம் மட்டும் சரி பார்ப்பதோடு சரி. அந்த கடிகாரங்கள் இருக்கும் இடம் தெரியாமல் என் வீட்டில் இருக்கின்றன. இப்பொழுது அந்த கடிகாரம் எங்கள் வீட்டில் வாழவில்லை. ஒலி எழுப்பாத தன் உறுப்புகளுடன் ஏதாவது ஒரு காயிலான் கடையில் தான் இருக்க வேண்டும். இப்பொழுது எவ்வளவோ நவீன கடிகாரங்கள் வந்து விட்டன. நம் அவசர வாழ்க்கையில் பலர் தங்களது குழந்தைகளையே கவனிக்க நேரம் இல்லாத போது கடிகாரத்தையா கவனிக்க போகிறோம்.என் வீட்டு கடிகாரம் இப்போது இல்லையென்றாலும் அது எழுப்பிய ஒலிகளை இன்னும் எனக்குள் நினைத்துக் கொள்ள முடிகிறது.

நாம் காலத்தை தான் சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம். நம் கடிகரங்களையாவது பாதுகாப்போம்.