Saturday, May 31, 2008


தொலை தூரத்தில்

ரயில் வரும் போதே

அதிரும் தண்டவாளத்தைப் போல,

உன்னைத் தெருமுனையில் பார்க்கும் போதே

அதிர்கிறது என் இதயம்...!!!



Friday, May 30, 2008




இடம் பெயர்தல்
எல்லோர் வாழ்விலும் தவிர்க்க முடியாத
ஒன்றாக மாறிவிட்டது...


படிப்பதற்கோ, வேலை பார்ப்பதற்கோ
ஏதோ ஒரு மொழி தெரியாத ஊருக்கும்
நம்மை தயார்படுத்திக் கொள்கிறோம்..!!

அவ்வப்போது நம் குடும்பத்தினரை, நண்பர்களை

நினைத்து விட்டு நம் அன்றாட வேலைகளைத் தொடர்கிறோம்...

புதிய இடத்தில் சில வசதிக் குறைவுகள் இருந்தாலும்

நலம் விசாரிப்புகள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

இடம்பெயர்தல் குற்றமில்லை...

ஆதி காலத்திலிருந்தே இடம்பெயர்தல் வழக்கத்தில் இருந்திருக்கிறது...

சில நேரங்களில் இடம்பெயர்தல் தண்டனைக்குரியதாய் தெரிகிறது...

காலத்தின் சக்கரங்கள் நம்மை எங்கெங்கோ

நகரச் செய்து விடுகின்றன...

காலத்தின் பயணத்தில் சேரும் இடம்

பயணிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை...

இதோ நானும் இடம்பெயரத் தயாராகி விட்டேன்...

என்னுடைய பயணமும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை...

வழித் துணைக்கு என்னுடன் எடுத்துச் செல்கிறேன்,

நாம் மகிழ்ச்சியாய் வாழ்ந்த நிமிடங்களின் நினைவுகளை...






அன்று
ஊரெல்லாம் மழை...
அந்த மழை நாளில் தான்
உன்னை நான் முதல் முதலாய் பார்க்க நேர்ந்தது..

வானவில் குடை பிடித்துச்
சென்றதில் ஆச்சரியம்...!!
மழைக்கு காளான்கள்
தான் முளைக்கும், எனக்கோ
காதல் முளைத்து விட்டது..!!

நானும் ஒரு குடையுடன்
உன்னைப் பின் தொடர்ந்தேன்..
உன் கால் படும் இடமெல்லாம்
மழை நீர் உறைந்து கொண்டிருந்தது..! அனேகமாய்
இன்று ஆலங்கட்டி மழை என்று வானொலியில்
அறிவிக்கக் கூடும்..!

உன் மேல் விழுந்து
மோட்சம் அடைய நினைக்கும் மழைத் துளிகள்
உன் குடை பட்டு
தெறித்து விழுகின்றன.

அவ்வப்போது நீ கூந்தல் விளக்க
குளிர் காற்று உன் கூந்தல் வாசனையை
திருடிக் கொண்டு ஓடுகிறது...
ரயில் இன்ஜின் பின் செல்லும்
பெட்டியைப் போல் உன்னையே
தொடர்ந்து வருகிறேன்...
கடைசியில் நம் ஊர்
நூலகத்தில் நுழைந்து விட்டாய்.
மழைக்கு ஒதுங்கியதாலோ என்னவோ
நூலகத்தின் சம்பிரதாயங்கள் மறந்து விட்டேன்..
உன் செய்கையைப் பார்த்த பின் தான்
என் வருகையைப் பதிவு செய்தேன்...

நூலகத்தில் நீ செல்லும் பகுதிக்கெல்லாம்
பின் தொடர்ந்தேன்... உன் கை பட வேண்டி புத்தகங்கள்
முன் வரிசையில் நிற்பது போல் தோன்றியது.!
நான் உன் பார்வை என் மேல் பட வேண்டிக் கொண்டிருந்தேன்...

இறுதியில் உனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு நீ அமர,

நான் என் கைக்கு கிடைத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு
உனக்கு சற்று எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்...

உன் செவ்விதழ் விரல்களால்
நீ பக்கங்கள் புரட்ட என் மனம்
இங்கே புரண்டு கொண்டிருந்தது...

தற்செயலாய் பார்த்தேன், நூலகத்தின் மூலையில்
விட்டு வந்த நம் குடைகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு..! அவற்றிற்கும் காதலோ..??

நேரமாகிவிட்டது என்று நினைத்தாயோ என்னவோ
திடீரென கிளம்பி விட்டாய்...
மழைத் தெருவில் நீ நடந்து மறைவதை
பார்த்துக் கொண்டிருந்தோம், நானும் என் குடையும் மழையில் நனைந்தபடி...

இப்போது மழை இன்னும் கொஞ்சம்
அதிகமாய் பொழியத் தொடங்கியது...!!

Thursday, May 29, 2008


வாழட்டும் எதிரிகள்..!!!

எதிரிகள் இல்லையெனில்

நமது பலம் உலகுக்கு தெரிவதில்லை...

கண்முன்னே வாழட்டும் எதிரிகள்,

ஒவ்வொரு வினாடியும்

நம்மை உயிர்த்தெழ வைக்க..!!

எத்தனை முறை விழுகின்றோமோ

அத்தனை முறை எழுவோம்....!!!

நாம் விழுவது வீழ்வதற்கல்ல,

மீண்டும் எழுவதற்கே,

தோல்விகளை மீண்டு வாழ்வதற்கே....!!!

உலகெல்லாம் நண்பர்கள் இருந்தால்

போர் புரிய முடியாது.

உலகெல்லாம் வாழட்டும் எதிரிகள்...

துணைக்குப் போரிட சில நண்பர்கள் மட்டும் போதும்....

உலகை வெல்வோம்...!!!

நீ

குடைக்குள் மழை அல்ல

குடைக்குள் புயல்....!!!



நான் உன்


உதட்டு மச்சமாய் பிறந்திருக்கலாம்...


உன் எச்சில் தின்றாவது


உன்னுடனே வாழ்ந்திருப்பேன்...

உன்னுடனே வாழ்ந்து இறப்பேன்....

கவிதை கற்க

கல்லூரிக்குப் போக வேண்டுமா என்ன..???

உன்னைக் காதலித்தால் போதாதா...???

Wednesday, May 28, 2008


நத்தை கொண்ட கூடாய்

எங்கும் செல்கிறேன்....உன்

நினைவுகளை சுமந்தபடியே....!!!

ஒரே தெருவில்
வசித்துக் கொண்டு
ஒவ்வொரு நிமிடமும்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்....

நமக்கு இடையிலான
இடைவெளியை
உன் மௌனத்தால்
நிரப்பி இருக்கிறாய்....

நான் தனிமையில்
உன் நினவுகளுடன்....

என் இதயக் குழந்தையைக்
கிள்ளி விட்டு
இப்போது எனக்கென்னவென்று
ஒதுங்கி நிற்கிறாய்....

மூட்டிவிடவே
நீ..!!
எரிவதற்கே
நான்..!!