Friday, May 30, 2008






அன்று
ஊரெல்லாம் மழை...
அந்த மழை நாளில் தான்
உன்னை நான் முதல் முதலாய் பார்க்க நேர்ந்தது..

வானவில் குடை பிடித்துச்
சென்றதில் ஆச்சரியம்...!!
மழைக்கு காளான்கள்
தான் முளைக்கும், எனக்கோ
காதல் முளைத்து விட்டது..!!

நானும் ஒரு குடையுடன்
உன்னைப் பின் தொடர்ந்தேன்..
உன் கால் படும் இடமெல்லாம்
மழை நீர் உறைந்து கொண்டிருந்தது..! அனேகமாய்
இன்று ஆலங்கட்டி மழை என்று வானொலியில்
அறிவிக்கக் கூடும்..!

உன் மேல் விழுந்து
மோட்சம் அடைய நினைக்கும் மழைத் துளிகள்
உன் குடை பட்டு
தெறித்து விழுகின்றன.

அவ்வப்போது நீ கூந்தல் விளக்க
குளிர் காற்று உன் கூந்தல் வாசனையை
திருடிக் கொண்டு ஓடுகிறது...
ரயில் இன்ஜின் பின் செல்லும்
பெட்டியைப் போல் உன்னையே
தொடர்ந்து வருகிறேன்...
கடைசியில் நம் ஊர்
நூலகத்தில் நுழைந்து விட்டாய்.
மழைக்கு ஒதுங்கியதாலோ என்னவோ
நூலகத்தின் சம்பிரதாயங்கள் மறந்து விட்டேன்..
உன் செய்கையைப் பார்த்த பின் தான்
என் வருகையைப் பதிவு செய்தேன்...

நூலகத்தில் நீ செல்லும் பகுதிக்கெல்லாம்
பின் தொடர்ந்தேன்... உன் கை பட வேண்டி புத்தகங்கள்
முன் வரிசையில் நிற்பது போல் தோன்றியது.!
நான் உன் பார்வை என் மேல் பட வேண்டிக் கொண்டிருந்தேன்...

இறுதியில் உனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு நீ அமர,

நான் என் கைக்கு கிடைத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு
உனக்கு சற்று எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்...

உன் செவ்விதழ் விரல்களால்
நீ பக்கங்கள் புரட்ட என் மனம்
இங்கே புரண்டு கொண்டிருந்தது...

தற்செயலாய் பார்த்தேன், நூலகத்தின் மூலையில்
விட்டு வந்த நம் குடைகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு..! அவற்றிற்கும் காதலோ..??

நேரமாகிவிட்டது என்று நினைத்தாயோ என்னவோ
திடீரென கிளம்பி விட்டாய்...
மழைத் தெருவில் நீ நடந்து மறைவதை
பார்த்துக் கொண்டிருந்தோம், நானும் என் குடையும் மழையில் நனைந்தபடி...

இப்போது மழை இன்னும் கொஞ்சம்
அதிகமாய் பொழியத் தொடங்கியது...!!

No comments: