எல்லோரும் மழையைத் தொட ஆசைபட்டால்
அந்த மழை மட்டும் உன்னைத் தொட்டுப் பார்க்க
விரும்புகின்றது, தெருவில் இறங்கி நடக்கும் போது
தூறலாய்த் தான் இருந்தது.. ஏனோ நனைந்து விட்டேன் உன்
வீட்டைக் கடக்கும் போது பெய்த கன மழையில்...!!
நனைய விரும்பும் குழந்தையாய் தெருவில்
அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது மழை..
அடக்க வரும் அன்னையாய் தடுத்து விடுகிறது உன் குடை...
மழை நேரத்தில் வீட்டுக்குள் வந்து
நீ கழற்றிக் காயப்போடும் ஆடையின் ஈரத்தின் வாசம்
காட்டிக் கொடுத்து விடுகிறது, மழைக்கு உன்னை எவ்வளவு
பிடிக்கும் என்பதை...
உனக்கு என்னைப் பிடிக்கும் என்ற
பொறாமையில் நான் நிற்கும் போது மட்டும்
இந்த மழை காற்றுடன் சேர்ந்து வந்து நம் வீட்டு
ஜன்னலைக் கோபமாய் அடித்து விட்டுச் செல்கிறது...
உன்னை மட்டும் இந்த மழைக்குப்
பிடிக்கும் என்பதால் நீ என்னுடன்
வருகையில் நான் குடை எடுத்துக் கொள்வதில்லை...
எனக்கு காய்ச்சல் என்றால்
இந்த மழைக்கு அப்படி என்ன சந்தோசம்..?!
நம் வீட்டுக்கு வெளியே இவ்வளவு மகிழ்ச்சியாக
நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது....
நேற்று உன்னில் நனைந்ததால்
அந்த மழைக்கு காய்ச்சல் வந்திருக்கக் கூடும்,
அதனால் தான் இன்று அது வெளியில் வரவில்லை போலும்..!!
நீ என்னைக் கட்டிக் கொண்டு தூங்குவதைப்
பொறுக்க முடியாமல் இடி, மின்னலைத் துணைக்குக்
கூட்டி வந்து என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறது ஆனால்
இடிச் சத்தத்தில் நீ இன்னும் இருக்கமாய் என்னைக்
கட்டிக் கொள்வதில் அந்த மழை இன்னும் சத்தமாய்
அழத் துவங்குகிறது..
"இந்த மழைக்கு வேற வேலை இல்லை,
எப்போதும் வெளியில் வரும் நேரம் பார்த்து பெய்கிறது" - சலிப்புடன் சொன்னாய்.
எனக்கு மட்டும் தான் தெரியும் அதற்கு
இது மட்டும் தான் வேலை என்று...
நம் வீட்டுப் பின்புறத்தில் மட்டும்
சேமிப்புத் தொட்டி இல்லாமலேயே மழை நீர்
சேர்ந்து விடுகிறது, உன்னை தினமும் பார்ப்பதற்காகவே...
No comments:
Post a Comment