Sunday, March 23, 2008


பழைய,விறகு வெட்டி கதை...

கோடாலியைத் தவற விட்ட விறகு வெட்டி ஒருவன் நதியின் கரையில் அழுது கொண்டிருப்பான். அவன் முன் திடீரென ஒரு தேவதை தோன்றி தங்கக் கோடாலி ஒன்றை நீடுவாள். அதை வாங்க மறுப்பான் அந்த விறகு வெட்டி.

உடனே ஒரு வெள்ளிக் கோடாலியை அவனுக்குத் தருவாள் அந்த தேவதை. அதையும் தன்னுடையது அல்ல என்று மறுப்பான் அவன்.

இறுதியில் அவனது இரும்புக் கோடாலியை அந்த தேவதை அவனிடம் கொடுக்கையில் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வான் அவன்.

அந்த விறகு வெட்டியின் நேர்மையில் மனம் மகிழ்ந்து மூன்று கோடாலியையும் அவனிடம் கொடுத்து விட்டு மறைந்து விடுவாள் அந்த தேவதை...

அப்படித்தான் நானும் ஒரு நாள் தனிமையில் அழுது கொண்டிருந்தேன்.
என் முன்னால் தோன்றினாள் என் தேவதை.!!

என்னை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள் "என் அழுகிறாய்??" என்றாள்.. அவள் குரலில் சற்றே கர்வமும், உரிமையும் தெரிந்தது. அவளிடம்

"என் இதயத்தைக் காணவில்லை" என்றேன். "உண்மையாகவா???" என்றாள்.

"என் இதயத்தின் மேல் சத்தியம்" என்றேன். திடீரென மறைந்து போனவள்,சில வினாடியில் மீண்டும் என் முன் தரிசனம் தந்தாள்.

"இந்த பிடி உன் இதயம்" என்றாள். உடனே அதை வாங்க கை நீட்டினேன். சட்டென என் கைகளைத் தட்டி விட்டாள்

"நீ இவ்வளவு பேராசைக்காரனா...!!! இது உன் இதயம் அல்ல.. என்னுடையது... இப்படி அடுத்தவர் இதயத்திற்கு ஆசைப் படுகிறாயே இது நியாயமா...?!?!" கோபமாய் கேட்டாள்...

"காதலில் இதயங்கள் மாறுவது தான் நியாயம்" என்றேன் அவளைப் பார்த்து...

சில நொடிகள் என்னையே முறைத்துப் பார்த்தவள் திடீரென மறைந்து விட்டாள், என் இதயத்தையும் அவளோடு எடுத்துக் கொண்டு....!!!

No comments: